- துவாரகன் பிரமிட்டுக்களுள் பாடம்போட்ட மம்மிகளோடு வாழ்கின்ற கனவுகள் வந்து தொலைக்கின்றன இளந்தென்றற் காற்றில் பசுந்தழைகளோடு தலையாட்டி ஆழவேரோடிய மரத்தின் நம்பிக்கை நினைவுகளில் மட்டும்தானா? பெருமூச்சுக்களிடையே தொலைந்து போகின்றன அழகிய காலங்கள் இற்றுப்போய்விடுமென்று தெரிந்தும் வாழைநாரால் அலங்கரித்த பூச்சாடியை வீட்டு முகப்பில் வைத்திருக்கிறான் பால்யவயதுத் தோழன். 2025/07
-துவாரகன் -------------- வேர்கள் எப்போதும்போல் மறைந்தே இருக்கட்டும். மண்ணின் பிடிமானத்தை விட்டு அவை வெளியே வரவேண்டாம். கிளைகளின் களிநடனம் பற்றியும் விருட்சத்தின் வலிமை பற்றியும் அவர்கள் மனங்குளிரப் பேசுவார்கள். தங்கள் வேர்களையும் தேடுவதாகத்தான் கூறுவார்கள். அத்தனையும் பசப்பு வார்த்தைகள். மண்ணும் பெயல்நீரும் பொத்திவைத்த ஆழவோடிய வேர்கள் வெளியே வரவேண்டாம். அவர்களின் குடுவைகளில் இருப்பது உயிர்வளர்க்கும் குளிர்நீரல்ல. உயிர்வாங்கும் சுடுநீர். 052024